ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஏற்கனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷ்ய படைகள் வசம் இருக்கும் கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவுடன் இணைப்பது குறித்தே பொது வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.
இந்த வாக்கெடுப்பில் அந்த 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பிராந்தியங்கள் ரஷியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா? என்பது பற்றிய தங்களின் விருப்பத்தை தெரியப்படுத்துவர்.
எனினும் இந்த வாக்கெடுப்புக்கு உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது போலியான வாக்கெடுப்பு. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடப்பதால் முடிவுகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவே அமையும். இந்த முடிவுகளை அங்கீகரிக்க மாட்டோம் என உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகள் உறுதியளித்துள்ளன.
எதிர்வரும் 27-ஆம் திகதி வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் வாக்கு பெட்டிகளை வீடு வீடாக எடுத்து சென்று, வாக்கு பதிவு செய்யவுள்ளனர். இறுதி நாளான 27-ஆம் திகதி மட்டும் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களில் இருந்து ரஷ்யாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக ரஷ்யாவிலும் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
நான்கு நாட்கள் வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் சில ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயுதம் ஏந்திய குழுக்கள் வீடுகளுக்கு சென்று வாக்களிக்காதவர்களை அச்சுறுத்தி வருகின்றன. அத்துடன், அரச ஊழியர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்றால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அச்சுறுத்தப்படுவதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போலி வாக்கெடுப்பு. இதனை சர்வதேச நாடுகள் கண்டித்து நிராகரிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று இரவு உரையில் கூறினார்.